Think before you speak.Read before you think.

head

சேரர்கள் கட்டுரை பாகம் - 01

பண்டைய சேரர்கள் தமிழர்களா? மலையாளிகளா? சேரர்களை பற்றிய விரிவான கட்டுரை தொடர் 

ஒரு புறத்தில் பெருங்கடலும், மறுபுறத்தில் வானுயர மலையும் ஓங்கி நிற்க இடை நடுவே பெருங்காடு படர்ந்து கொடுவிலங்குகளும், கடும் புதர்களும் இருக்கும் நிலத்தை சீர்படுத்தி ஆட்சி செய்ய தொடங்கியவர்கள் தான் பண்டைய சேர மன்னர்கள் ஆவார்கள். சேரர்கள் என்றும், சேரலர் என்றும் சேரல் என்றும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் வாயிலாக இவர்களை நாம் அறிய கடமைப்பட்டுள்ளோம். மலையை ஆட்சி செய்ததால் இவர்கள் மலை நாட்டவர் என்றும், இவர்கள் ஆட்சி செய்த பகுதி மலை நாடு என்றும் அழைக்கப்பட்டது.

பிற்காலத்தில் இச்சொல் மறைந்து மலைநாடு என்பது மலையாள நாடு என்று நிலைபெற்று விட்டது. இதே போல் சேரலர் என்ற சொல் மருவி கேரளர் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டது. சேரர்களில் மிகப் பழமையான மன்னனாக அறியப்படக் கூடியவன் பெருஞ்சோற்று உதியன் என்பவன் ஆவான். இவனை உதயஞ்சேரலாதன் என்றும் அழைப்பர். நெடுஞ்சேரலாதன் உதயஞ்சேரலாதன் பெருஞ்சேரலாதன் என்று தங்களுடைய பெயருக்குப் பின்னால் ஆதன் என்ற பின்னொட்டு சொல்லை பயன்படுத்துவதன் நோக்கம் என்னவென்றால் ஆதன் என்பது மூத்தவன் என்றும் முதலில் தோன்றியவன் என்றும் பொருள்படும். எனவே சேரர்கள் தங்களை ஆதி குடியின் வழிவந்தவர்கள் என்பதன் அடையாளமாக ஆதன் என்ற பின்னொட்டு சொல்லை பயன்படுத்துகிறார்கள். மேலும் வான வரம்பன் வானவன், குட்டுவன், குடக்கோ, பொறையன், இரும்பொறை கடுங்கோ, கோதை என்பன இவர்களுடைய சிறப்பு பட்டப்பெயர்கள் ஆகும். வானவரம்பன் என்பதற்கு வானமும் நிலமும் சந்திக்கும் இடங்களை எல்லாம் எல்லையாக உடையவன் என்று புலவர்களால் வியந்து உரைக்கப்படுகிறான். இவர்கள் தொடக்கத்தில் மலை நாட்டை ஆட்சி செய்தமையால் மலைகளிலும், மலைச்சரிவுகளிலும் மண்டியிருந்த காடுகளிலும் வேட்டையாடுவதையே தமது தொழிலாகக் கொண்டனர். இதனால் தான் வேட்டைக்கு உதவுகின்ற வில் அம்பு சின்னம் இவர்கள் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவர்களின் கடற்கரை பகுதிகளில் பனை மரங்கள் காடு போல செறிந்து இருந்ததால் தங்களின் அடையாள மாலையாக பனம்பூ மாலையை அணிந்து கொண்டனர். பண்டைய சேர மன்னர்கள் தங்கள் நாட்டை குட்ட நாடு என்றும், குட நாடு என்றும் இரு நிலங்களாக பிரித்து ஆட்சி செய்தனர். வஞ்சி மாநகரத்தை தலைநகராகக் கொண்டு உதயஞ்சேரல் என்ற மன்னன் குட்ட நாட்டை ஆட்சி செய்தான். அதே சமயம் தொண்டி மாநகரத்தை தலைநகராகக் கொண்டு குட நாட்டை ஆட்சி செய்தவர் வேளிர் குல தலைவரான அதியமான் என்பவராவார். பிற்காலத்தில் குடநாடு என்பது தகடூர் நாடு என பெயர் பெற்றது. 



வஞ்சி மாநகரத்தை உதயஞ்சேரல் என்ற சேர மன்னன் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதே சமயம் அண்டை நாடான வேணாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தவன் வெளியன் என்ற வேளிர் குல தலைவன் ஆவான். வேணாட்டு வெளியனின் மகளுக்கும் உதியனுக்கும் திருமண ஒப்பந்தம் நடைபெற்று இனிதாக திருமணம் நடந்தேறியது. வேணாட்டவரோடு இருந்த முரண்களை எல்லாம் முறித்து வேணாடும் தன்னாடு போல் கருதி உதியன் ஆட்சி செய்து வந்தான். வேணாட்டை அடுத்துள்ள தென்குமரி நாட்டில் ஒரு திறமில்லாத ஆட்சியாளர் அரசேறியிருந்தான். இதனை கண்ணுற்ற உதியன் வேணாட்டின் உதவியோடு தென் குமரி நாட்டின் மீது படையெடுத்து எல்லையை விரிவு படுத்தினான்.  தென்குமரி நாடும் சேரர்களுக்கு உரியதாயிற்று. இதனால் சான்றோர்கள் இவனை நாடுகண் அகற்றிய சேரன் என்று சிறப்பு பட்டம் கொடுத்து அழைத்தனர். உதியனியின் புகழ் திசையட்டும் வீசத் தொடங்கியது. நாட்டில் செல்வம் பெருகியது. நாட்டு மக்களெல்லாம் இன்புற்று வாழ்ந்தனர். கொங்கு நாட்டிலும் தென்பாண்டி நாட்டிலும் உதியன் செய்த போர் செயலால் பல மன்னர்கள் இவனின் நிழல் தேடி அடைக்கலமானார்கள். வேந்தர் குலத்தை வேரறுத்தவன் என்றும் வரம்பறுத்து தனது எல்லையை விரித்தவன் என்றும் இவனது புகழ் உச்சத்தை அடைந்தது. பகை நாட்டவரோடு கடும் போர் நிகழ்த்தியமையால் தனது வீரர்கள் பல பேர் மாண்டு போனார்கள். எனவே இவர்கள் பொருட்டால் பெருஞ்சோற்று விழா ஒன்றை நடத்தி வீரர்களுக்கு நன்றி செலுத்தினான் இதனை பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். வீரர்களுக்கு பெருஞ்சோறு அளித்தமையால் இவன் பெருஞ்சோற்று உதியன் என்று வரலாற்றில் அழைக்கப்பட்டான். உதியனுக்கும் வேணாண்டு இளவரசிக்கும் பிறந்தவர்களில் முதலாமவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும்  இரண்டாமவர் பல்யானைசெல் கெழு குட்டுவன் என்பவனும் ஆவார்கள். உதியனுக்கு பின் சேர நாட்டை ஆட்சி செய்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான். இவனது ஆட்சி சிறப்பாக நடைபெற்றது பொதியமும் இமயமும் பெற்று நிலை பெறுக. என்று சான்றோர்கள் இவனை வாழ்த்தியதால் அக்கூற்றின் உட்பொருளை ஆராய்ந்தான். இமயம் வரை தனது ஆட்சியை விரிவாக்க திட்டமிட்டான். தனது முன்னோர்களின் சாதனையை ஒரு கணம் சிந்தித்தான். தனது தந்தையான உதியனின் ஆட்சியில் ஞாயிறு மேலை கடலில் தோன்றி கீழைக்கடலில் குளித்தது. என்று சான்றோர்கள் பலரால் பாராட்டும் அளவிற்கு புகழ் பெற்றார். மேலும் தனது மூதாதையர்களில் மற்றொருவர் வானமலையை வெற்றி கொண்டு வானவன் என்ற சிறப்பு பெற்றிருந்தார். எனவே தானும் அதுபோல புகழடைய வேண்டுமென்று நெஞ்சில் வேட்கை கொண்டு இமயத்தில் கால் பதிக்க தன் தீர்மானம் எடுத்துக் கொண்டான்.


இமயத்தை வெற்றி கொள்வதற்கு எண்பேராயர் என்று அழைக்கப்படக் கூடிய தனக்கு கீழ் உள்ள எட்டு சிற்றரசுகளை ஒருங்கிணைத்து இமயத்தை வெற்றி கொள்வதற்கு தலைமை ஏற்றான். அண்டை நாடுகளான பாண்டிய, சோழ நாடுகளையும் தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டு இமயத்தை நோக்கி படை கட்டினான். தமிழுக்கு எல்லையாக இமயம் அமைய வேண்டும் என்ற சேரமானின் எண்ணத்தை பாண்டிய அரசும் சோழ அரசும் வரவேற்று அப்படைக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். யானை படைகளும் குதிரை படைகளும் தேர் படைகளும் காலாட்படைகளும் என பெரும்படை திரண்டு இமயம் நோக்கி புறப்பட்டது. கொங்கணத்திற்கும் இமயத்திற்கும் இடையே ஆரிய நாடு இருந்தது. அப்பகுதியை ஆட்சி செய்தவர்கள் மௌரியர்களும் சதகண்ணர்களும் ஆவார்கள். இமயத்தை நோக்கி சேரன் வருவதைக் கண்டு தங்கள் படைகளை தயார் செய்து அவர்களை எதிர்க்கத் துணிந்தனர். வெண்முரசம் கொட்ட போர்பறை ஒலிக்க செருக்களம் ஆட்டம் காணத் தொடங்கியது. போரின் முடிவில் ஆரியன் அடக்கப்பட்டான். கண்ணகிக்கு சிலை செய்ய இமயத்தில் எடுத்த கல்லை ஆரியனின் தலையில் சுமக்கச் செய்தான். தமிழின் எல்லையை விரிவுபடுத்தி வரம்பறுத்து வீறுகொண்ட சேரன் இமயத்தில் வில் கொடி பொறித்து போலோச்சினான். இமயம் முதல் குமரி வரை உள்ள நிலப் பகுதியை விரிவுபடுத்தி சிறப்பாக ஆட்சி செய்தான். காடறுத்து நாடாக்கும் பணியை மேற்கொண்டான். மக்களை அவ்விடம் வசிக்க செய்தான். பல பகுதிகளுக்குச் சென்று குடிமக்களின் குறைகளை அறிந்து அவற்றிற்கு தீர்வு கண்டு நல்லாட்சி புரிந்தான். சில நாட்கள் கழிந்தது. கடற்கொள்ளையர்களான கடம்பர்களின் குறும்புகளுக்கு கடிவாளமிட சேரன் காலத்தை எதிர்பார்த்து காத்திருந்தான். கொங்கண நாட்டை ஒட்டியுள்ள கூபகத் தீவை தலைமை இடமாகக் கொண்டு கடம்ப மரத்தை காவல் தெய்வமாக பேணி வாழ்ந்து வந்தவர்கள் தான் கடம்பரங்கள் ஆவார்கள். இவர்கள் கூபகத் தீவை கடக்கும் சரக்கு கப்பல்களை எல்லாம் சூறையாடி வணிகர்களுக்கு இழப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தினர். வாணிபத்திற்காக சரக்குகளை ஏற்றி செல்லும் கப்பல்களையும் நாவாய்களையும் சூரையாடுவதையே தங்கள் தொழிலாக கொண்டனர். இதனால் சேர நாட்டிற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. வணிகர்கள் எல்லாம் தங்களுடைய பொருள்களை கப்பலில் ஏற்றி கடல் கடக்க அச்சமுற்றனர். கடற்கடம்பர்களின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்று அரசவையில் புகார் எழுந்தது. சினமுற்று எழுந்த சேரன் கடற் குறும்புகள் செய்த கடம்பர்களை கருவறுக்க கடல் நோக்கி கலம் செலுத்தினார். கடம்பர்கள் வாழும் தீவை அடைந்து ஒவ்வொருவராக சீவிச் சரித்தான். கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தினான். கடம்ப நாட்டை தீக்கிரையாக்கினான். இதனால் "மாக்கடல் நடுவே இருக்கை அமைத்தவன்" என்று சான்றோர் பலரால் புகழப்பட்டான்.

Share:

No comments:

Post a Comment

Popular