சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு மாதந்தோறும் பொருளாதார உதவிகளை செய்து பொருளாதார சமநிலை உருவாக்க போவதாக கூறி இருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டியது தான் எனினும் இந்த தகவல்இந்தியாவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவது கடினம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டது மோடி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. ஆனால் நான்கரை ஆண்டு காலத்திற்கு பின்பும் வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
பெருநகரங்களில் அங்கும் இங்கும் வேலை தேடி சுற்றித் திரியும் பட்டதாரி இளைஞர்கள் இதற்கு சான்றாக உள்ளனர். பெருவாரியான அரசுத் துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு வரும் இச்சூழலில் அங்கு வேலை தேடி செல்லும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தொடக்கநிலை ஊதியமும் மிகக் குறைந்த அளவே வழங்கப்படுகிறது. இதனால் பொருளாதாரத்தில் மேலும் மேலும் பின்தங்கிய நிலையே சமீபத்திய இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை மூழ்கும் கப்பல் என்று சித்தரித்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் உயர் பொறுப்பில் இருக்கும் உயர் துறை அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகிறார்கள். இதில் முக்கியமானது ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் கவர்னர் உர்ஜித் பட்டேலின் ராஜினாமா. மேலும் சில நாட்களுக்கு முன்பு இந்திய புள்ளியியல்(Statistical) துறையின் உயர் அதிகாரிகள் P.C.மோகனன் R. V.மீனாட்சி ஆகியோரின் ராஜினாமா அந்தக் கூற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
இவர்கள் ராஜினாமாவிற்கு பிறகு வேலைவாய்ப்பு பற்றிய மாதிரி புள்ளிவிவரத்தை மத்திய அரசு நெருக்கடி காரணமாக வெளியிட்டிருக்கிறது. அதில் 31 சதவீத கிராமப்புற மக்களுக்கும் 46 சதவீத நகர்ப்புற மக்களுக்கு வேலை இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் இந்தியாவில் வேலை தேடக்கூடிய இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது மிகக் கடினமான சவாலாக இனி வரப்போகிற காலங்களில் இருக்கப் போகிறது. இனி அடுத்து ஒரு மாற்று அரசாங்கம் மத்தியில் வந்தாலும் கூட இந்த பொருளாதார சிக்கலை நீக்கி வேலைவாய்ப்பினை உருவாக்குவது மிக சவாலான ஒரு செயலாகவும் நீண்ட கால அளவு எடுக்க கூடிய ஒரு செயலாகவும் அமைந்து விட்டது. இதனால் இனி வரக்கூடிய காலகட்டங்களில் பொருளாதார வறுமை நிலை ஏற்படக் கூடிய ஒரு சூழல் உருவாக இருக்கிறது.
இதன் காரணமாகவே காங்கிரஸ் தற்பொழுது இந்த அறிவிப்பை அறிவித்திருக்கிறது இந்த அறிவிப்பினால் பொருளாதார சிக்கலை ஓரளவு தடுக்க முடியும் என காங்கிரஸ் நம்புவதாக கருதப்படுகிறது
No comments:
Post a Comment